மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பியோடினார் கோட்டாபய! – உறுதிப்படுத்தியது விமானப் படை.
இலங்கையில் பலத்த எதிர்ப்புக்களைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.
அவர் இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்குச் சென்றுள்ளார்.
அதிகாலை 1.45 மணியளவில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான அன்டனோ 32 ரக விமானத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய அவர், அதிகாலை 3 மணியளவில் மாலைதீவில் தரையிறங்கியுள்ளார்.
ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் சென்றுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரின் பாரியார் ஆகியோர் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்குச் சென்றமையை இலங்கை விமானப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக இன்று அதிகாலை விமானப் படையின் விமானம் ஒன்றைத் தாம் வழங்கியதை இலங்கை விமானப் படை விசேட அறிக்கையூடாக ஒத்துக்கொண்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கையின் அரசமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதுள்ள அரசின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்துக்கு உட்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, சுங்கம் திணைக்களங்களின் அனைத்துச் சட்டங்களுக்கும் உட்பட்டு, ஜனாதிபதி, அவரின் பாரியார் மற்றும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவுக்குச் செல்வதற்கு விமானப் படையின் விமானம் ஒன்று 2022 ஜூலை 13ஆம் திகதி அதிகாலை வழங்கப்பட்டது” – என்றுள்ளது.