அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் உட்பட மூவர் விடுவிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கான புதிய பொறுப்புகளை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூடுதல் தலைமை கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக எஸ்பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சிவி சண்முகம், பா.தனபால், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பா.பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.