முதல் நாளிலேயே பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறிய ஆளும் கட்சி – மனோ
பாராளுமன்ற விவாதங்களின் போது எதிர்கட்சிக்கு வழங்கப்படும் நேரம் குறித்து இதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த பாராளுமன்ற சம்பிரதாயத்தை புதிய அரசாங்கம் மீறியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
“பாராளுமன்றில் எதிர்கட்சியே விவாதம் கோருகிறது. உலகில் உள்ள பாராளுமன்ற சம்பிரதாய வழக்கப்படி ஆளும் எதிர்கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். ஆனால் இலங்கையில் உள்ள ஆளும் அரசாங்கம் முதலாவது ஆளுங்கட்சி கூட்டத்தில் தமது தரப்பில் உறுப்பினர்கள் அதிகம் என்று தமக்கான நேரத்தை அதிகமாக ஒதுக்கிக் கொண்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் எமக்கும் மூன்றில் இரண்டு இருந்தது. ஆனால் நாம் நூற்றுக்கு அறுபது வீதம் எதிர்கட்சிக்கு கொடுத்து நாற்பது வீதத்தை மாத்திரமே நாம் பெற்றோம். உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. எதிர்கட்சியே விவாதத்தை கோரி விவாதம் செய்யும். ஆனால் அரசாங்க தரப்பு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொண்டது. முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறியமை கவலைக்குரிய விடயமாகும்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.