இராஜிநாமா செய்வதை இழுத்தடிக்கும் கோட்டா!

? தான் வெளிநாட்டில் நிற்பதால் பதில் ஜனாதிபதி ரணிலே என்று வர்த்தமானி ஊடாக அவர் அறிவிப்பு
? சிங்கப்பூர் சென்றடைந்ததும் கோட்டா பதவி துறப்பார் என்கிறார் சபாநாயகர்

தனது வெளிநாட்டுப் பயண இலக்கு இன்னமும் நிறைவேறாத காரணத்தால் பதவி விலகலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இழுத்தடித்து வருகின்றார்.

(ஜூலை 13) ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கனவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். எனினும், இன்று அதிகாலை இலங்கை விமானப்படையின் விமானத்தில் நாட்டை விட்டு மாலைதீவுக்குத் தப்பியோடிய அவர், இன்னமும் பதவி விலகவில்லை.

“நான் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளேன்” என்ற அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை மாத்திரம் தனது கையொப்பத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, ஜூலை 13ஆம் திகதி (இன்று) தொடக்கம் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை ஜனநாயக சோசலியக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான், இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக ஜனாதிபதிப் பதவிக்குரிய தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் இயலாது எனக் கருதுவதனால், நான் இலங்கைக்கு வெளியே இருக்கும் கால எல்லைக்குள் ஜனாதிபதிப் பதவியின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் பிரயோகிப்பதற்கும் புரிவதற்குமாக இலங்கை ஜனநாயக சோசலியக் குடியரசு அரசமைப்பின் 37 (01) ஆம் உறுப்புரையின் கீழ், இலங்கை ஜனநாயக சோசலியக் குடியரசின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை 2022 ஜூலை மாதம் 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு இத்தால் நியமிக்கின்றேன்” – என்றுள்ளது.

இதேவேளை, தான் சிங்கப்பூர் சென்றடைந்ததன் பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பிற்பகல் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று மாலை சிங்கப்பூருக்குப் பயணமாகத் திட்டமிட்டிருந்தார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்தமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.