ஊரடங்கு நீக்கப்பட்டதையடுத்து ரயில், பஸ் சேவை முன்னெடுப்பு.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பில் அரச எதிர்ப்புப் போராட்டம் காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் நேற்று நண்பகல் 12 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் நிலைமை மோசமடைய நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை, ஊரடங்கு காரணமாக நேற்று மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமை போல் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.