”டாய்லெட்டுக்குள்ள ஏசி போட்டு வச்சிருக்கான்” : வைரலாகும் சிறுவனின் வீடியோ..!
”நாம சாப்பாடு இல்லாம இருக்கோம். அங்க டாய்லெட்டுக்குள்ள ஏசி போட்டு வச்சிருக்கான்” என ஜனாதிபதி மாளிகை குறித்து தமிழ் சிறுவன் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். விபரீதத்தை முன்னரே உணர்ந்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ, முன்னெச்சரிக்கையாக குடும்பத்துடன் தலைமறைவானார்.
திடீர் முன்னெச்சரிக்கையாக ராணுவ விமானத்தில் மாலத்தீவு சென்ற அவர், அங்கும் அரசியல் அழுத்தம் அதிகரிக்கவே, அங்கிருந்து சவூதி விமானத்தில் சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில், நாடு முழுதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இருப்பினும் அங்கு தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. அவசர நிலையை மீறும் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார், கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டது முதலே, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது, சமையல் அறையில் சமைத்து உண்பது, மெத்தையில் சண்டையிட்டு விளையாடுவது, போராட்ட செய்தியை அங்குள்ள டிவியில் படுத்து கொண்டு ஹாயாக பார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தன. ஜனாதிபதி மாளிகையை சுற்றுலாவுக்கு செல்வது போல் கூட்டம் கூட்டமாக பார்த்து செல்வதும் தொடர்ந்தது.
பெட்ரோல்,டீசல் பற்றாக்குறை, மின்வெட்டு பிரச்னைகளுக்கு மத்தியில், அரண்மனைக்குள் தினமும் விதவிதமாய், வித்தியாசமாய் போராட்டகாரர்கள் செய்யும் குறும்புத்தனம் மிக்க வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வந்த வண்ணம் இருந்தது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை கேலி செய்யும் விதமாக, ஒவ்வொரு 5 நிமிடத்திலும், இலங்கையில் ஜனாதிபதிகள் மாறி கொண்டே இருக்கின்றனர் என்பதை ஜனாதிபதி இருக்கையில் மாறி மாறி அமரும் வீடியோவை டுவிட்டரில் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
மேலும், ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்த்த இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுவன்,
”நினைச்சு கூட பார்க்கல. ராஜ மரியாதையோடு வாழ்ந்து ஓடி போயிட்டான். இங்க நிறைய ஏசி.,டிவி எல்லாம் இருக்கு. எங்க மாமா ஒருத்தரு சொன்னாரு.. கக்கூஸ்ல எல்லாம் ஏசி போட்டு வைச்சுருக்கானு சொன்னாரு..
இத பார்த்த உடனே ரொம்ப இன்ஸ்பயரா இருக்கு..
நாம சாப்பாடு இல்லாம இருக்கோம். அங்க டாய்லெட்டுக்குள்ள ஏசி போட்டு வச்சிருக்கான்” என பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது குறிப்பிட்ட ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி அதிகாரிகளிடம் மாளிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.