பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும் சபாநாயகர் அறிவிப்பு.

அரசமைப்புக்கமைய பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, இழுபறி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதிப் பதவி இராஜிநாமாக் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்றிரவு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் கொண்டுவந்தார்.
இந்தநிலையிலேயே ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜிநாமா செய்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.