பதில் ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டபோது, அவரின் இந்த அறிவிப்பு வெளியானது.
தற்போது முதல், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான அரசமைப்பு ரீதியான நடைமுறை இடம்பெறும்.
அந்த நடைமுறை நிறைவடையும் வரையில், ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசமைப்புக்கு அமைய பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.
புதிய ஜனாதிபதி தெரிவானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்குத் தாம் அறியப்படுத்தியதற்கு அமைய இடம்பெறும் என்றும் சபாநாயகர் அறிவுத்துள்ளார்.