மஹிந்த, பஸில் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ராஜபக்ச யுகம் மக்கள் தன்னெழுச்சி எதிர்ப்புப் போராட்டத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பியோடும் முயற்சிக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்குத் தப்பியோடி அங்கிருந்து ஜனாதிபதிப் பதவியை இராஜிநாமா செய்துள்ள நிலையில், அவரின் சகோதரர்களான மஹிந்தவும் பஸிலும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தால் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் இவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி இவர்களுக்கு வெளிநாடு செல்ல முடியாது என ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் சிலரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.