பாக்சிங் போட்டியில் எதிராளி தாக்கி உயிரிழந்த கிக் பாக்சர் – பெங்களூருவில் அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த கிக் பாக்ஸ்சர் நிகில் சுரேஷ். 23 வயதான நிக்கில் சுரேஷ், கடந்த 10ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற கே1 கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிராளி நடத்திய தாக்குதலில் காயம்பட்டு நிலை குலைந்து விழுந்துள்ளார் நிக்கில். இந்த தாக்குதலில் இவரின் தலையில் பலமான காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் நிக்கில் அனுமதிக்கப்பட்டார்.நிக்கில் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிவந்த நிலையில், இரண்டு நாள்கள் கழித்து நிக்கில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விளையாட்டு வீரர் ஒருவர் போட்டியின் போதே அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நிக்கிலின் பெற்றோர் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவே இந்த துர்நிகழ்விற்கு காரணம் என நிகிலின் தந்தை சுரேஷ் தனது புகார் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற போட்டியில், மருத்துவ குழு, ஆக்சிஜன் சிலின்டர், அவசர ஊர்தி போன்றவற்றை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாட்டு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நிக்கில் பங்கேற்ற பாக்சிங் போட்டியில் இல்லை. உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாததே நிகிலின் மறைவுக்கு காரணம் என பெற்றோர் தனது புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், பாக்சிங் ரிங்கின் குஷனும் விழும்போது காயம் படாமல் இருக்கும் அளவிற்கு போதிய திக்னெஸ் கொண்டதாக இல்லை எனவும் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நிகிலின் புகாரை ஏற்ற கர்நாடகா காவல்துறை தலைமறைவாகியுள்ள கே 1 பாக்சிங் அசோசியேசன் பொறுப்பாளர்களை தேடிவருகிறது. நிகிலின் மரணத்திற்கு அவரது பயிற்சியாளர் விக்ரம் நாகராஜ் பேஸ்புக்கில் உருக்கமான இரங்கலை வெளியிட்டுள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ‘அங்கு ஆம்புலன்ஸ், மருத்து குழு போன்றவை இருந்திருந்தால் இத்தகைய இழப்பு நேர்ந்திருக்காது. இந்த மோசமான துயரத்தில் இருந்து நிகிலை காப்பாற்றி இருக்கலாம். நான் தற்போது சந்தித்திருக்கும் நிலை எந்த பயிற்சியாளருக்கும் ஏற்படக்கூடாது. இனியாவது இது போன்ற சாகச விளையாட்டை ஏற்பாடு செய்பவர்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.