பிளவடையுமா மொட்டுக் கட்சி?
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும்போது யாருக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது தொடர்பாக ஆளும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிடவுள்ள அதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவும் அந்தப் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டும் என்றும், இதன்படி டலஸ் அழகப்பெருமவைத் தவிர வேறு எவரையும் கட்சி ஆதரிக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே குழுப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், கட்சி இரண்டாகப் பிளவடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.