அயர்லாந்து போராட்டம் வீணானது – ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். ஹென்றி நிகோலஸ் 79 ரன்னும், பிலிப்ஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிரிங் 120 ரன்னும், ஹாரி டெக்டர் 108 ரன்னும் குவித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்களும் விடாது போராடினர்.
கடைசி 2 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி போராடி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன்னில் தோற்றது.
இறுதியில், அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 359 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது மார்ட்டின் குப்திலுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெலுக்கும் வழங்கப்பட்டது.
எளிதில் வீழ்ந்து விடும் என நினைத்த நியூசிலாந்து அணிக்கு அயர்லாந்து வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறடித்தனர்.