விராட் கோலிக்கு, பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் இரு ஆட்டங்களில் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், தொடர்ந்து விராட் கோலி விமர்சனத்தைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் பெரிதாக ரன்களை எடுக்காததால் விராட் கோலியை இணையத்தில் கிண்டல் செய்ததுடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸமுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர்.
இந்நிலையில், இன்று பாபர் ஆசம் தன் டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ‘இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். பாபரின் இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.