தொழுகை சர்ச்சை.. மத பிரார்த்தனைகளுக்கு தடை விதித்த லூலூ மால்..

லூலூ வணிக வளாகத்தில் திறந்தவெளியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ததாக அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மத பிரார்த்தனைகளுக்கு தடை விதித்து லூலூ மால் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த வாரம் புதிதாக லூலூ மால் திறக்கப்பட்டது. ரூ.2000 கோடி முதலீட்டில் மொத்தம் 300 சில்லரை விற்பனை கடைகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தை காண்பதற்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் ஜூலை 12ல் லூலூ மாலில் சிலர் தொழுகை நடத்தியாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவ துவங்கியது. வீடியோ வைரலானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அகில பாரதிய இந்து மகாசபா, லூலூ மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அதோடு, அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் சிசிர் சதுர்வேதி கூறுகையில், ‛‛மாநிலத்தில் பொதுஇடத்தில் தொழுகை நடத்தப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது விதிமீறலாகும். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்” என கூறினார். இதற்கிடையே அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பினர் சார்பில் வணிக வளாகத்தில், இந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினரும் பிரார்த்தனை செய்ய அந்த வணிக வளாகத்தின் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமடைந்துவரும் நிலையில், லூலூ வணிக வளாக நிர்வாகம் இன்று, `எந்தவொரு மத வழிபாடும் வளாகத்தில் அனுமதிக்கப்படாது’ என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் தொழுகை விஷயம் தொடர்பாக மால் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.