‘இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை’: அசாம் முதல்வர்
கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அசாம் மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக அசாமில் இதுவரை இல்லாத பாதிப்பு பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த அவர், “அசாமில் இப்படியொரு வெள்ளத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. மக்கள் இதுவரை இல்லாத அளவு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மழை வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளனர். 54, 837 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 7 லட்சத்து 42 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்பு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 19 பேர் உள்பட இதுவரை 195 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர். மாநிலம் முழுவதும் 2.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.