யாழில் பொலிஸார் துரத்திய டிப்பர் ஆலயத் திருவிழாவுக்கும் புகுந்தது! – 7 பேர் வைத்தியசாலையில்…..

யாழ்., நெல்லியடி – மாலுசந்திப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த ஆலயத்தில் நேற்றிரவு சப்பரத் திருவிழா இடம்பெற்றது. இந்நிலையில், ஆலயச் சூழலில் பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தபோது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் பக்தர்கள் மத்தியில் புகுந்து அவர்களை மோதித்தள்ளிக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த குறித்த டிப்பர் வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்தபோது, டிப்பர் வாகனம் பொலிஸாரின் உத்தரவை மீறி மிக வேகமாகத் தப்பிச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அதனை மீட்பதற்கும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.