கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி விசாரிக்கக் கோரி வழக்கு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி மாணவியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்த பள்ளி மாணவியின் சடலத்தை பள்ளி நிர்வாகம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. உடற்கூராய்வில் மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. எனினும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதனி ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வளாகத்திற்கு புகுந்த கலவரக்காரர்கள் பள்ளி பேருந்து உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதேவேளையில், பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றும் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நாளை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்யவுள்ளது.