செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை
செஸ் ஒலிம்பியாட் குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28-ம் முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு முதன் முறையாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை.
தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பர பதாகைகள், லோகோக்கள், மாரத்தான் போட்டிகள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அவ்வகையில் இதற்கான லோகோ, சதுரங்க குதிரை வடிவ தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கருப்பு, வண்ண நிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டு கூடுதல் அழகோடு மிளிர்கிறது.
இதனிடையே, ‘வெல்கம் டு நம்ம ஊரு’ என்ற செஸ் ஒலிம்பியாட் பாடலுக்கான 39 வினாடி டீசரை அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம்பெறும் இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த பாடலிலும், சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்க தரையில் சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவதைபோன்றும், கருப்பு வெள்ளை நிற ஆடையணிந்தவர்கள் நடனமாடுவதை போன்றும் படமாக்கபட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விளம்பர பாடல் டீசரை விமர்சித்துள்ளார். அதில், “செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? திமுக அரசை போன்ற இந்த விளம்பரத்தில் எந்த பொருளும் இல்லை. வெறும் காட்சி மட்டும்தான். கடவுளின் பொருட்டாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலிழந்து கிடக்கும் ஆட்சியின் மீது தனது கவனத்தை செலுத்தட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.