நடுக்கடலில் தத்தளித்த மன்னார் மீனவர்களில் 2 பேர் மீட்பு; ஒருவர் பலி.
மன்னார், பியர் பகுதியில் இருந்து ஒரு படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மூவரில் இருவர் தமிழக மீனவர்களால் உயிரோடு மீட்கப்பட்டபோதும் மற்றைய மீனவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மன்னாரிலிருந்து கடந்த 14ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு படகு கரை திரும்பவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படையினருக்கும் அந்தத் தகவல் வழங்கப்பட்டது.
இருந்தபோதும் மூவருடன் பயணித்த இந்தப் படகு நடுக் கடலில் 14ஆம் திகதி இரவே பழுதடைந்த காரணத்தால் மூவரும் தம்மைத் தாமே பாதுகாப்பதற்காகவும், தம்மைக் கடல் அலை இழுத்துச் செல்லாத வகையிலும் தாமே படகுடன் தம்மை இணைத்துக் கட்டினர்.
கடலில் மூவரும் தத்தளித்துக் கொண்டிருந்ததை தமிழக மீனவர்களின் ரோலர் படகு ஒன்று அவதானித்து கிட்ட நெருங்கி வந்தது. இதன்போது தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிருடன் இருந்த இருவரையும் மீட்டனர்.
அவர்களைத் தமிழக மீனவர்கள் கச்சதீவை அண்மித்த பகுதியில் கொண்டு வந்து இறக்கினர்.
கச்சதீவுக்கு அருகில் கடலில் குதித்துக் கரையேறிய மோகன்ராஜ், ஜெனார்த்தனன் ஆகிய இரு மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு மன்னாருக்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதேநேரம் படகில் உயிரிழந்த இராஜமூர்த்தி என்னும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது மீனவரின் சடலத்தை மன்னாரில் இருந்து சென்ற படகு ஒன்று மீட்டு வந்தது.