8 பிரதமர்கள்.. 54 அமைச்சர்கள்: ரணில் ஏமாற்றுவதாக பலத்த சந்தேகம்:ஒலி நாடாக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம்
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 54 பேருக்கும் பிரதமர் பதவியை வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர ஏனைய அனைவருக்கும் அரசாங்க அமைச்சுக்கள் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவருக்கு மட்டுமே பிரதமர் பதவிக்கு உரிமை உண்டு, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதுக்கும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று பாராளுமன்றம் கூடிய போது, ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் வெளியாகியுள்ளதோடு, அவர் ஏமாற்றி விட்டதாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பொஹொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இருவர், தமக்கு ஆதரவளிக்கவில்லை என சந்தேகிக்கப்படும் பொஹொட்டு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு பணம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குமாறு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளனர். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்துள்ளனர். அவற்றை அவர்கள் ஏற்கனவே பல வேட்பாளர்கள் மற்றும் போராட்ட ஆர்பாட்டக்காரர்களின் கைகளுக்கு பகிர்ந்துள்ளனர்.
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரிவு 19 இன் படி, “பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தலில்” நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு செல்வாக்கு செலுத்துவது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் வேட்புமனுவை இழக்க ஒரு காரணமாகும். அத்துடன் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி பதவியை அவர் இழக்க நேரிடும்.
இந்த தொலைபேசி பதிவுகள் ஏற்கனவே ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் பல குழுக்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த தொலைபேசி அழைப்புகளை ஊடகங்களுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.