சமூக ஊடகங்கள் மூலம் எம்.பி.க்களை அச்சுறுத்துவோரை தேடுங்கள் – பொலிஸாருக்கு ரணில் ஆலோசனை
எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை முடக்கி சமூக வலைத்தளங்கள் ஊடாக உறுப்பினர்களுக்கு அச்சுறுத்துவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“வாக்களித்து விட்டு, கிராமத்திற்கு வர வேண்டாம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் கொடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பதில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் தங்களின் வீடுகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் முறைப்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பான பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டச் சட்டங்களின் கீழ் இந்த விசாரணையை நடத்துமாறு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.