தமிழர் அபிலாஷையையும் கோட்பாடாக உள்வாங்கவேண்டும் போராட்டக்காரர்கள் குமார் குணரத்தினத்திடம் மனோ எம்.பி. வலியுறுத்து.
தமிழர் அபிலாஷைகளையும் உள்வாங்க, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்தினம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதைப் புறந்தள்ளிச் செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போகக் கூடாது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்தினம் கூறுகின்றார். இதுவே எமது கொள்கையாகவும் இருக்கின்றது. இதனாலேயே நாம் எப்போதும் ராஜபக்ச அரசியல் கலாசாரத்தை எதிர்த்து வந்துள்ளோம். ஆனால், இந்த உத்தேச புதிய அரசியல் கலாசாரம், தமிழர் அபிலாஷைகளையும் வெறும் ஒருசில கோஷங்களுக்கு அப்பால் சென்று, கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதைப் போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு குமார் குணரத்தினத்தின் முன்னிலை சோஷலிசக் கட்சியும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.”
அரசியல் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி உருவாகியுள்ளது. அந்தச் சக்தியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது. அது உண்மை. ஆனால், இதே விதமான சட்டத்துக்கு அப்பால் சென்றுதான், கடந்த காலங்களில் தமிழர்கள் ஒடுக்கு முறையை சந்தித்தார்கள். இப்போதும் சந்திக்கிறார்கள்.
ஆகவே, மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சபைகள் உருவாக்கப்படட்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் வரட்டும். நாமும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். ஆனால், சட்டங்கள் வரமுன் அவற்றுக்கு அப்பால் முதலில் கோட்பாடுகள் வர வேண்டும். அவையே பின்னர் அரசமைப்பில் இடம்பெறும்.
இப்போது போராட்டக்காரர்கள் மத்தியில், தமிழர்களின் தேசிய அபிலாஷைகள் தொடர்பில், கோட்பாடுகளை நாம் காணவில்லை. எமக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு போராட்டக்கார அமைப்புகளின் ஆவணங்களில் ஒருசில மென்மையான கோஷங்களைத்தான் நாம் காண்கின்றோம்.
ஆகவே, தமிழர் அபிலாஷைகளையும் கோஷங்களாக மட்டும் இல்லாமல், கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிசக் கட்சி ஆகிய அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்” – என்றார்.