கள்ளக்குறிச்சி விவகாரம்: தவறு யார் மீது இருந்தாலும் உரிய நடவடிக்கை – அன்பில் மகேஷ்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கறுப்பு வண்ண பேட்ஜ் அணிந்து மனு அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டது..
விடுமுறை அளித்தால் நடவடிக்கை:
இதற்கிடையில் தனியார் பள்ளிகளை மூடுவதற்கு எந்த முன்அனுமதியும் பெறவில்லை என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது பயின்றுவரும் மாணவர்களை அரசு பள்ளிகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது சரியானதல்ல. மாணவியை இழந்த பெற்றோரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று நேரடியாக மூத்த அமைச்சர் எ.வ வேலு உடன் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.
மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தமிழகத்தில் தங்களின் அனுமதி இல்லாமல் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க கூடாது . இன்று வழக்கம் போல் தனியார் பள்ளிகள் செயல்படுகிறது என்றார்.