பென் ஸ்டோக்ஸ் ஓய்வு!
ஒருநாள் போட்டி என்பதுதான் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதி உழைப்பை கொட்டவேண்டிய வடிவம். இதற்குப் பென் ஸ்டோக்ஸின் உடல் ஒத்துழைக்க மறுக்க, அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார். ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் எனும்போது, பேட்டிங்கில் நம்பர் 4-ல் வரும்போது கடினம்தான். மேலும் அதிகப்படியான பணிச்சுமையால் உண்டாகிய மனச்சோர்வால் காலவரையற்ற ஓய்வை அறிவித்தே மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்திருந்தார். என்னளவில் அவரின் விருப்பம் மற்றும் மேற்கத்திய நாட்டவரின் வாழ்க்கைப் புரிதலை வைத்து பார்க்கையில், அவரது இந்த முடிவு மிக மிக சரியானது!
ஆனால் எனக்கு இதிலிருந்து வேறொன்று தோன்றுகிறது. அது என்னவென்றால்; ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அழிவு!
ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் விதிமுறைகள் மாற்றப்பட்டு, இரு முனைகளில் புதிய பந்து பயன்படுத்தப்பட்டு, ஆடுகளங்கள் அதிகளவில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு, ஒரு நீட்டிக்கப்பட்ட டி20 கிரிக்கெட் வடிவமாக, எதிர்பாராத பெரிய திருப்பங்கள் அற்ற, பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான ஒரு போட்டியாக, ஒருநாள் கிரிக்கெட்டை ஐ.சி.சி மாற்றி அழிவை நோக்கித் தள்ளியிருக்கிறது!
மேலும் சிவப்புப்பந்துடெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க நினைக்கும் ஐ.சி.சி-யால், வெள்ளைப்பந்தில் ஒருநாள் போட்டியை வாழவைக்க முடியவில்லை. டி20 கிரிக்கெட் போட்டி வணிகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், வெள்ளைப்பந்தில் ஒருநாள் போட்டியின் முக்கியத்துவம் திட்டமிட்டே குறைக்கப்படுவதாய் தோன்றுகிறது.
மேலும் ஒருநாள் போட்டிகள் வீரர்களின் அதிகப்படியான உழைப்பை வாங்கக்கூடியது. பெரிய அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களின் முக்கிய வீரர்களை அதிகப்படியான போட்டிகளில் விளையாட வைப்பதால், அதிக உழைப்பை தரவேண்டிய ஒருநாள் போட்டிகளில் அவர்களால் தொடர்ச்சியாய் விளையாட முடியாமல் போகலாம்.
இப்போது பென் ஸ்டோக்ஸ் எடுத்திருக்கும் முடிவு, நாளை பலவீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று தோன்றுகிறது. ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, மற்ற வடிவத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள புத்திசாலித்தனமாக யோசிக்கலாம்.
ஏற்கனவே ஐ.சி.சி-யின் கையலாகாத செயல்பாட்டாலும், பெரிய கிரிக்கெட் போர்டுகளின் அதிகப்படியான வணிக ஈடுபாட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் அழிந்து வருகிறது. இவர்களின் இந்தப் போக்கால் நாளை வீரர்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் பென் ஸ்டோக்ஸை ஒத்து அமையலாம். இதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை இன்னும் வேகமாய் அழிக்கலாம்!
(இந்திய வீரர்கள் இப்படியான முடிவுக்கு வருவது கடினம். ஏனென்றால் பின்னணியில் நிறைய வணிகம் சார்ந்து பணம் புழங்குகிறது)
பென் ஸ்டோக்ஸின் புதிய கிரிக்கெட் பயணம் சிறக்கட்டும்!