ஜனாதிபதி தேர்வில் யார் யாருக்கு ஆதரவு? (பிந்திய இணைப்புடன்)
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சைக் கட்சிகளின் கூட்டமைப்பு ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக பாராளுமன்றத்தில் நாளைய வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாளைய தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன இளையோர் பெரமுன தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தலைமையகத்தில் கூடியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் மைத்திரிபால சிறிசேனவும் , அவரது கட்சியும் , டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அறிவித்தார்.
அங்கு இன்று எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் உருவாகியிருப்பது சித்தாந்தத்தை விட ஒருமித்த கருத்து உடன்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்புமனுவில் இருந்து விலகுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைய நாளைய தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிக்க தமது கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.
அத்துடன், நாளைய தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று பிற்பகல் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாளைய தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கப் போகின்றன என்பதை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அதன் தலைவர் ஆர். சம்பந்தன் வீட்டில் சந்தித்து பேசிய பின்னர் , நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவில் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்க கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.