வேறு மாற்று வழி இல்லாததால் டலஸுக்கு ஆதரவு! – மனோ தெரிவிப்பு.
“நாடாளுமன்றத்துக்குள் நிலவும் யதார்த்த நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ஒப்பிட்டுப் பார்த்தே டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளோம். வேறு மாற்று வழி கிடையாது.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட செய்திக் குறிப்பில்
“பலருக்கு ராஜபக்சர்கள் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் எனத் தெரியவில்லை. அரசியல் தெளிவில்லை; பக்குவமில்லை; புரிதல் இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவுடன்தான், முழு நாடே எதிர்க்கும், நாம் எப்போதும் எதிர்க்கும் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சசிந்திர ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஒரே அணியில் சேர்ந்து வாக்களிக்கப் போகின்றார்கள். இதுதான் உண்மை நிலைமை.
நடைபெறும் தேர்தல் நாட்டுக்குள் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அல்ல. நாடாளுமன்றத்தில் இருக்கும் ராஜபக்சர்கள் உட்பட அனைத்து எம்.பிக்களும் வாக்களிக்கும் தேர்தல். இதுதான் அரசியல் சட்டம். அதை இப்போது மாற்ற முடியாது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டம் நடத்தும் போராளிகள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராகப் போராட்டம் செய்கின்றார்கள். ராஜபக்சர்கள் இருக்கும் அணிக்கு வாக்களிக்க வேண்டாமே என்று எம்மைக் கோருகின்றார்கள். எம்மை வந்து சந்தித்து, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சசிந்திர ராஜபக்ச ஆகியோர் இருக்கின்றார்கள். அவர்கள் ரணிலுடன் சேர்ந்து அவருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்.
டலஸ் அழகப்பெருமாவுடன் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில சேர்ந்து வாக்களிக்கப் போகின்றார்கள். இதுதான் யதார்த்த நிலைமை.
விமல் வீரவன்ச எனது எதிரிதான். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் நிலவும் யதார்த்த நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ஒப்பிட்டுப் பார்த்து, நமது கட்சிகள் தீர்மானங்களை எடுத்துள்ளன. வேறு மாற்று வழி கிடையாது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பவை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்.
எமது கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சி இரா.சம்பந்தன் தலைமையிலான வடக்கு – கிழக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இந்த நான்கு கட்சிகளும், ராஜபக்சர்களுக்கு எதிராக டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன” – என்றுள்ளது.