தோண்டப்பட்டிருக்கும் சென்னை சாலைகள்.. தாமதமாகும் ஆம்புலன்ஸ்கள்.. நோயாளிகள் பாதிப்பு
சென்னை நகரில் பல்வேறு சாலை வளர்ச்சி பணிகள் காரணமாகத் தோண்டப்பட்டிருக்கின்ற பள்ளங்கள் மற்றும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காரணமாக ஆம்புலன்ஸ்கள் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளைச் சென்று சேர முடியாமல் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
ஐந்து கிமீ தூரத்தைக் கடக்க 8 நிமிடங்கள் தாமதமாகிறது எனவும் தூரம் அதிகமானால் 45 நிமிடங்கள் வரை ஆம்புலன்ஸ்கள் தாமதமாகிறது எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக் குழு, மருத்துவமனையிலிருந்து அருகிலிருக்கும் இடங்களைச் சென்றடைய முன்பு 8 நிமிடங்கள் ஆனது. தற்போது 15 நிமிடங்கள் ஆகின்றன எனத் தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி ஹைரோட், கீழ்பாக்கம் மற்றும் எக்மோர் உள்ளிட்ட சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்களின் சராசரி வேகம் குறைந்துள்ளது. இதனால் இச்சாலைகளில் ஆம்புலன்ஸ்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சாலைகளில் நடைபெறும் பணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல பிரதான சாலைகள் தோண்டப்பட்டிருப்பதால் அப்போலோ உள்ளிட்ட மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸுகளும் வேகமாக மருத்துவமனைகளைச் சென்றடைய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ்களை பொறுத்தவரை நோயாளிகளின் இடத்துக்குச் சென்று சேர்வதில் சராசரியாக 1 நிமிடமும், மீண்டும் மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டு சேர்ப்பதில் சராசரியாக 6 நிமிடங்களும் தாமதமாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் கவலைக்கிடமாக உள்ள நோயாளிகள் மருத்துவமனை சென்று சேர்வது ஒரு நிமிடம் தாமதமானாலும் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டவை செய்யும் பணிகளால் 600 சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.