‘தம்பி’ குதிரை சின்னம் – செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் தமிழகத்தின் அடையாளம்!
சென்னையில் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ‘தம்பி’ என்கின்ற குதிரை சிலை, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக திகழ்கிறது.
மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கவும், போட்டியை காண வரும் அனைவரையும் வரவேற்கும் விதமாகவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தம்பி சிலையை மாநில அரசு காட்சிப்படுத்தி வருகிறது.
அனைவரையும் செல்ஃபி எடுத்துக்கொள்ளத் தூண்டும் இந்த குதிரை சிலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இரவு பகல் பாராமல் சிலையை வடிவமைத்துவருகின்றனர்.
மணலில் சிலை செய்து அதை அச்செடுத்து ஃபைபரில் வடிவமைத்து மண் சிலையாகவே மாற்றும் இவர்களின் உழைப்பு அசாத்தியமானது. போட்டி தொடங்க இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ளதால் இறுதிகட்ட பணிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, வேட்டி அணிந்து வணக்கத்துடன் அனைவரையும் வரவேற்கும் ஒலிம்பியாட் தம்பி சின்னமானது, செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் தமிழகத்தின் அடையாளத்தையும் சுமந்து நிற்கவுள்ளது.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் இவர்களது திறமையை பலரும் பாரட்டி வருகின்றனர்.