காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளையதினம்(23) கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளை(23) மதியம் 1மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு தோழர், மின்சார சேவைச் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் க.இளங்குமரன், நல்லூர் சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் கே.சரவணன், பருத்தித்துறை சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் ச.கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காலிமுகத்திடல் கோட்டாகோகம பகுதிக்குள் இன்று நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருக்கும் கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டகாரர்களும் தாக்கினர். இந்நிலையில் அந்த தாக்குதலை கண்டிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.