ஓராண்டில் 747 வெப்சைட்கள், 94 யூடியூப் சேனல்கள் முடக்கம் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதில் 2021-22 ஆகிய காலகட்டத்தில் அரசு தடை செய்த வெப்சைட்டுகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைத்தள கணக்குகள் எத்தனை எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார். அதில், 2021-22 ஆண்டு காலத்தில் 747 வெப்சைட்டுகள், 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைத்தள கணக்குகளை அரசு முடக்கியுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69ஏ படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்புகளையும், இணையதளங்கள் வாயிலாக போலி செய்திகளையும், கருத்துருவாக்கங்களை செய்பவர்களையும் அரசு கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யூடியூப், வெப்சைட் மட்டுமல்லாது வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம் 2021 சட்டப்படி, மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்ஆப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்த கணக்குகள் முடக்கப்படும். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் எந்த பயனாளரும், கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்பதை நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதன் படி, மே மாதத்தில் மட்டும் சுமார் 19 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ட்விட்டரிலும் 46 யூசர்களை நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.