உள்நாட்டு பிரச்சனை தீரும் வரை இலங்கைக்கு IMF பணம் இல்லை!
இலங்கை தனது நாட்டில் நிலவும் குழப்பத்தை தீர்க்கும் வரை சர்வதேச நாணய நிதியம் கடன் வசதிகளை வழங்காது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போது சர்வதேச நாணய நிதியத்தால் அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
பல மாதங்களாக நடைபெற்று வரும் பொதுப் போராட்டங்களால் இலங்கை சோர்வடைந்துள்ளது. மேலும் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை சந்தித்த மிக ஆழமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முறைகேடான நிதி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி உணவு, மருந்து, எரிபொருள் கிடைக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்றதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தலைமை மாற்றம் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தியதா என்பது சந்தேகமே.
ஒரு நாடு தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கும்போது மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குகிறது. இருந்த போதிலும் இலங்கையில் ஸ்திரமின்மை இழுபறி நிலை நீடிப்பதாகவே தெரிகிறது.
சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினம் சரியாக பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்றால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.