புலிகள் எழுச்சி வழக்கில், யாழ்.மேயர் மணிவண்ணனுக்கு விடுதலை!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்றதாக அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டில் இருந்து யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த யாழ்.நீதிவான், அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு காரணமான மாநகரசபை ஊழியர்களின் சீருடைகளையும் மாநகர சபைக்கு மீள ஒப்படைக்குமாறு ஜூலை 20 புதன்கிழமை மேலும் உத்தரவிட்டார்.
எல்.ரீ.ரீ.ஈ பொலிஸாரின் சீருடை போன்று இருப்பதாக கூறி ஐந்து பேர் கொண்ட நகர்ப்புற சிவிலியன் கண்காணிப்பு குழுவை நியமித்ததாக யாழ் மாநகர சபை முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. புலிகளை மறுசீரமைத்த குற்றச்சாட்டின் பேரில் மேயர் 2021 ஏப்ரலில் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டார். பல மணிநேர விசாரணைகளின் பின்னர் யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வர்தராஜா பார்த்திபன் ஆகியோர் யாழ் மாநகர ஆணையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் யாழ் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டனர். மறுநாள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) அதிகாலை 2 மணி வரை விசாரணை இழுத்தடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, “புலிகளின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் அணிவதைப் போன்ற சீருடையை அணிந்து ஐந்து பேர் கொண்ட நகர்ப்புற சிவில் கண்காணிப்புக் குழுவை பணியில் அமர்த்தியது” என்பதாகும்.
யாழ் மாநகர சபை முதல்வரின் கூற்றுப்படி, யாழ்ப்பாண நகரத்தின் பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இந்த குழுவின் பங்கு. இவர்களுக்கு தற்காலிகமாக யாழ்ப்பாண மேயர் நியமனம் வழங்கியிருந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குப்பைகளை அகற்றுதல், அபராதம் அறவிடுதல், கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுதல் போன்றவற்றை கண்காணிப்பது யாழ். கண்காணிப்புப் படையின் கடமையாகும்.
ஒரு வடத்தின் பின் , 2022 ஜூலை 20 புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதிக்கு கிடைத்த வெற்றி, எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.