அருகே அமர்வதை தடுத்தால் மடியில் அமர்வோம்.. நூதன முறையில் கேரளா மாணவர்கள் போராட்டம்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரிக்கு அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக கல்லூரி மாணவ மாணவியர்கள் அமர்ந்து பேசி செல்லும் வழக்கம் உள்ளது.
இந்த பேருந்து நிழற்குடை இருக்கைகளில் மாணவ மாணவியர்கள் அருகருகே அமர்ந்து பேசுவது சிலருக்கு பிடிக்கவில்லை. இதை தடுப்பதற்கு அந்த மர்ம நபர்கள், நிழற்குடையின் இருக்கைகளை சேதப்படுத்தி, ஒரு இருக்கை நடுவே இடைவெளி விட்டு இன்னொரு இருக்கை இருக்குமாறு நிழற்குடையை மாற்றி அமைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், நூதன நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நிழற்குடை இருக்கையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில், அவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்துகொண்டு அதை புகைப்படம் எடுத்துள்ளனர். நாங்கள் நண்பர்கள். எங்கள் நட்புக்கு பாலின வேறுபாடு இல்லை எனக் கூறி பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாணவ மாணவியர்கள் அருகருகே இருப்பதற்கு நாட்டில் தடை ஏதும் இல்லை. இதை தவறாக பார்ப்பவர்கள் இருண்ட உலகத்தில் வாழ்பவர்களாக தான் இருக்க முடியும். கேரளா முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். இங்கு இது போன்ற சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேருந்து நிறுத்தத்தை பாலின சமநிலை கொண்ட பேருந்து நிறுத்தமாக அறிவித்து அங்கு வைபை வசதி செய்துத் தரப்படும் என மேயர் ஆர்யா ராஜேந்திரன் உறுதி தெரிவித்துள்ளார்.
அருகே அமர்வதை தடுத்தால் மடியில் அமர்வோம் என மாணவ மாணவியர் தங்கள் நூதன எதிர்ப்பை தெரிவித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் நெட்சின்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.