ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்தி வருகின்றன – தலைமை நீதிபதி ரமணா விமர்சனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நீதிபதி எஸ்பி சின்ஹா நினைவு கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாட்டின் ஊடகத்துறையின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நீதித்துறை மீதும் நீதிபதிகள் மீதும் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்ட கருத்துருவாக்கங்கள், பரப்புரைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நீதிபதிகள் உடனடியாக எதிர்வினை ஆற்றுவது இல்லை. இதை அவர்களின் பலவீனம் கையாளாகத்தனம் என்று கருத வேண்டும். வழக்கின் போக்கையோ தீர்ப்பையோ தீர்மானிக்கின்ற சக்தியாக ஊடக விவாதங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்தி அனுபவம் வாய்ந்த நீதிபதிகளைக் கூட முடிவெடுப்பதில் தடுமாற வைத்துவிடுகின்றன.
தவறான கருத்துக்கள், உள்நோக்கம் கொண்ட விவாதங்களை முன்னெடுத்து நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது ஜனநாயக நலனுக்கு உகந்தது அல்ல. புதிய ஊடக கருவிகள் விஷயங்களை பெரிதுபடுத்துவதில் அதீத வல்லமைகள் கொண்டவையாக உள்ளன. ஆனால், அவற்றில் எது சரி எது தவறு, எது நல்லது எது தீயது, எது உண்மை எது பொய் என்பதை பிரித்துப் பார்ப்பது இயலாத காரியமாக உள்ளது. எனவே, ஊடகங்கள் தங்கள் அளவு பொறுப்புகளை தாண்டி செயல்பட்டு, ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னுக்கு கொண்டு செல்கின்றன. அச்சு ஊடகங்கள் கூட ஓரளவு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வரும் நிலையில், எலக்ட்ரானிக் மீடியாக்கள் பொறுப்பற்று நடந்து வருகின்றன.
எனவே, ஊடகங்கள் தாமாகவே முன்வந்து சுய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது.குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு அறிவை புகட்டி, நாட்டின் ஆற்றாலை வளர்க்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவின் செய்தித்தொடர்பாளராக நுபர் சர்மா டிவி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நுபர் சர்மாவை கடுமையாக சாடியது இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக தாக்கி பதிவுகளை வெளியிட்டது விவாதமானது.