திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 15 குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில், 64 சதவீத வாக்குகளை பெற்று முர்மு வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்களை முழுமையாக வெளியிட்டன. அதன்படி, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதரவின்படி பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பிலான வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரம் படி திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக அணி மாறி 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்தது தெரியவந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, கொரடா மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம், ராஜ்யசபா உறுப்பினர் என். சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.