தமிழர் பிரச்சினையில் அதீத கவனம்; ரணிலை நம்பவேண்டும் கூட்டமைப்பு.
“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நானும் அதீத கவனத்துடன் செயற்படுவோம். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் பலவிதமான கேள்விகளுக்குத் தினேஷ் குணவர்தன பதிலளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்களிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுத்த தீர்மானம் தொடர்பில் இனி நாம் பதிலளிப்பது அழகு அல்ல. எனினும், நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாகத் தெரிவாகிய அன்று சபையில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தன்னுடன் இணைந்து பயணிக்க சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனவே, ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியும் நானும் அதீத கவனத்துடன் செயற்படுவோம்” – என்றார்.