சம்பந்தனை விலகுமாறு கோருகின்றார் செல்வம்.
“தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகிக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குச் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? எம்.ஏ.சுமந்திரனா?
பதில்:- அடுத்த தலைமை என்று பார்க்கின்றபோது அது கூட்டுத் தலைமை அதாவது சுழற்சி முறையிலான தலைமையாகத்தான் இருக்கும். எம்.ஏ. சுமந்திரனைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் புதிதாக வந்தவர். எங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சுழற்றி முறையிலே இருக்க வேண்டும். தற்போது சம்பந்தன் தலைவராக இருக்கும்போது அடுத்த தலைமை சம்பந்தமாக நாங்கள் இன்னமும் அவருடன் பேசவில்லை. ஆகவே, சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத் தலைமையாக – சுழற்றி முறை தலைமையாகத்தான் இருக்கும். இதிலே தனிமனித தலைமையை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கேள்வி:- கூட்டுத் தலைமை அதாவது சுழற்சி முறை தலைமை என்றால் எவ்வாறு அமையும்?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழரசுக் கட்சி, எமது ரெலோக் கட்சி, புளொட் கட்சி ஆகியன கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. ஆகவே, அந்த அடிப்படையிலேயே சுழற்சி முறை தலைமை ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வருடங்கள் என்று பிரிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு யாப்புத் தயாரிக்கப்பட வேண்டும். அது பதியப்பட வேண்டும். அந்த அடிப்படையில் சுழற்சி முறையிலான தலைமைத்துவம் ஜனநாயக ரீதியாக வரவேண்டும்.
அந்த ரீதியிலேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிவரும் காலங்களில் செயற்படும் என்பதை நான் குறிப்பிடட விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனிமனித தலைமைத்துவம் சம்பந்தன் ஐயாவுடன் முற்றுப்பெறும்.
கேள்வி:- இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசியிருக்கிறீர்களா?
பதில்:- இன்னும் இல்லை. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றபடியால் இந்த விடயத்தை அவரிடம் நேரில் இடித்துரைத்துக் கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் ஏற்படும்போது கட்டாயம் அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் சம்பந்தன் ஐயாவால் இயலாமல் இருக்கின்றது. எனவே, இந்த விடயத்தில் ஐயா கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சர்வகட்சி அரசு அமைந்தால் அதில் சஜித் பிரேமதாஸவின் கட்சியினர் பங்கேற்றால் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான். இந்நிலையில், சம்பந்தன் ஐயா வயது முதிர்ந்த நிலையில் அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்க முடியாது. ஆகவே, தற்போதைய நிலைமையில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமைக்கு அதாவது சுழற்சி முறை தலைமைக்கு அவர் இடம் கொடுக்க வேண்டும். இது தொடர்பில் விரைவில் – சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு அவருடன் பேசிப் பார்ப்போம்.
கேள்வி:- கூட்டுத் தலைமை என்றால் நீங்கள் (செல்வம் அடைக்கலநாதன்) அல்லது சித்தார்த்தனா தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்?
பதில்:- ஆம், அப்பிடித்தான் வரும். இதுவரை காலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலேதான் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் ஐயா பதவி வகிக்கின்றார். ஆகவே, நாங்கள் மூன்று பேரும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் அந்தத் தலைமை தாங்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்.