இனி இரவு நேரங்களிலும் தேசிய கொடி பறக்கலாம் – விதிகளில் மாற்றம் கொண்டு வந்த அரசு
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதை சிறப்பாக கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளையும் விழா திட்டங்களையும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா என்ற திட்டத்தின் பேரில், நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கொடியேற்றி வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மூவர்ண தேசிய கொடி பயன்படுத்தும் விதிகளில் அரசு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. பழைய விதியின் படி சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டும் தான் நாட்டின் தேசிய கொடியை பறக்க விடலாம். இந்த விதியை மாற்றி இரவு நேரம் உட்பட 24X7 என அனைத்து நேரங்களிலும் தேசிய கொடியை பறக்க விட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் இதற்கு முன்னதாக இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கும், பாலிஸ்டர் துணிகளில் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது புதிய விதியின் படி, கையினாலோ, இயந்திரத்தினாலோ காட்டன், பாலிஸ்டர், சில்க் ஆகிய துணிகளில் தயாரிக்கப்பட்ட கொடிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு கொடி சட்டத்தில் அரசு இதற்காக மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் வெளியிட்டுள்ளார். அரசு அறிவித்துள்ள ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் 20 கோடி வீடுகளில் 100 கோடி மக்கள் கொடியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.