TNPSC Group 4 தேர்வு… லேட்டா வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு..
தமிழ் நாடு அரசுத் துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் – 4’ தேர்வு இன்று நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கியது.
அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இன்று (ஜூலை 24) குரூப் – 4′ தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 22 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில், 503 மையங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
இதனிடையே, தேர்வு மையத்திற்குள் 9 மணிக்குள் உள்ளே இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால், 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோன்ற தாமதமாக வந்ததாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில இடங்களில் அதிகாரிகளிடம் முற்றுகை போராட்டமும் நடந்தது.
அந்தவகையில், திருவாரூர் பகுதியில் உள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக 9:05 மணிக்கு வந்தவர்களை தேர்வு எழுத காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு துறை விதிகளின்படி உங்களை அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆகையால் போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்ல வேண்டும் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் கண்ணீர் மல்க அங்கிருந்து சென்றனர்.
இதேபோல், திருவள்ளூரில் டி.ஆர்.பி.சி.சிபள்ளியிலும் தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு தேர்வு மையத்தில் 9.01 மணிக்குக்கு குருப்4 தேர்வு எழுத வந்த மாணவிகள் 10 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், எவ்வளவு சொல்லி பார்த்தும் உள்ளே விடாததால் தேர்வு எழுத வந்த மாணவர் – மாணவிகள் திரும்பி சென்றனர்.
இதேபோல், ஆரணியில் டி.என்.பி.சி குரூப்-4 தேர்வுக்கு 100க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்பதால் அனுமதி மறுக்கபட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்துள்ளதாக தேர்வு எழுதுவர்கள் போலீசாரிடம் எடுத்துரைத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணிகோட்டாச்சியர் தனலட்சுமி வாகனத்தை தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென முற்றுகையிட்டு உரிய நேரத்தில் வருகைபுரிந்தும் தேர்வு மையத்தில் அனுமதிமறுக்கபட்டுள்ளதாக எடுத்துரைத்தனர். அதற்கு அவர் டிஎன்பிஎஸ்சி தெளிவாக கூறியுள்ளது தேர்வு எழுதும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டும் எனவும், ஒரு நிமிடம் கால தாமதம் என்றாலும் அனுமதி இல்லை என கூறி சென்றார். தொடர்ந்து தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றுத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.