மக்களின் போராட்டம் ஜூலை 14இல் வெற்றி தற்போது கிளர்ச்சியாளர்களே விரட்டியடிப்பு என்கிறார் ரணில்.

“கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக மக்கள் முன்னெடுத்த அமைதிவழிப் போராட்டம் கடந்த 14 ஆம் திகதி பெரு வெற்றியுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே முன்னெடுக்கப்பட்டு வந்தன. அங்கு நின்றவர்கள் வன்முறையை விரும்பினார்கள். அதனால்தான் அவர்களை ஜனாதிபதி வளாகப் பகுதியிலிருந்து படையினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளனர்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாக முன்னர் அமைச்சர்கள் சிலருடன், காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“காலிமுகத்திடல் போராட்டத்தை நான் ஆதரித்தேன். பிரதமராகப் பதவியேற்க முன்னரும், பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் அவர்களை ஆதரித்தேன். போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் என்னைச் சந்தித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்தேன்.
அந்தப் போராட்டத்தின் நோக்கம், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதுதான். அந்த மக்கள் போராட்டம் கடந்த 14ஆம் திகதி மாபெரும் வெற்றியுடன் முடிவுக்கு வந்து விட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அரசியல் பின்னணியுடன் கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள்தான் முன்னெடுக்கப்பட்டன. அங்கு நின்றவர்கள் வன்முறையை நாடினார்கள். அதனால்தான் அவர்களை அங்கிருந்து படையினரும் பொலிஸாரும் அகற்றியுள்ளனர்.
இப்போது அவர்கள் அமைதி வழியில் போராடுகின்றார்கள் என்றுகூறி, மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது” – என்றார்.