அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் – ஓ.பி.எஸ் அறிவிப்பு
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக, அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.