சொல்வதைச் செய்வார்கள் என்று ரணில், தினேஷை எப்படி நம்புவது? – கேள்வி எழுப்புகிறார் சம்பந்தன்.
“ராஜபக்சக்களோ அவர்களது அணியினரோ எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் அல்லர். இவ்வாறானதொரு நிலையில் அவர்களின் தயவுடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கூறுவதை எந்த அடிப்படையில் நம்பலாம்?”
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.
தன்னுடைய பதவிக் காலத்தினுள் அரசியல் தீர்வைக் காண்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் அரசைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பவேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், ரணில், தினேஷ் ஆகியோரின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எமது செய்தியாளர் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வாயால் வாக்குறுதிகளை வழங்குவதில் ராஜபக்சக்களும் அவர்களின் கட்சியினரும் வல்லவர்கள். ஆனால், அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் கூட சிங்கள மக்களுக்கு ராஜபக்சக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அவர்களுக்கு வாக்களித்த மக்களே அவர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்தனர்.
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விலகினாலும் தற்போது அந்தப் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களின் கட்சியினரின் ஆதரவுடன்தான் செயற்படுகின்றார்கள்.
எனவே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதியும் புதிய பிரதமரும் வாயால் சொல்வதைச் செயலில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஆதரவு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே.
புதிய ஜனாதிபதியினதும் புதிய பிரதமரினதும் செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாட்டின் நலன் கருதி – எமது மக்களின் நலன் கருதி நல்ல கருமங்களை அவர்கள் முன்னெடுத்தால் அவற்றுக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம்” – என்றார்.