‘கியூ ஆர் கோர்ட்’ பெறாதோர் எரிபொருள் அட்டையைப் பயன்படுத்த அனுமதி.

“தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக ‘கியூஆர் கோர்ட்’ இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், கிராம அலுவலர்கள் ஊடான உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் அட்டையைப் பயன்படுத்தலாம். இது தொடர்பில் மாவட்ட செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
பல இடங்களில் கியூஆர் கோர்ட்டைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனைப் பெற்றுக்கொள்வது தொடர்பான இணையத்தளத்திலுள்ள தொழில்நுட்ப இடர்பாடுகள் காரணமாகவும் தடங்கல்கள் ஏற்படுகின்றன. நாடு முழுவதும் கியூஆர் கோர்ட் திட்டம் இன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும்போது அதனைப் பெற்றுக்கொள்ள இயலாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் பதிலளிக்கும்போது,
“தொழில்நுட்பத் தடங்கல்கள் இருக்குமாயின் அந்தந்த மாவட்டச் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு சில விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கியூஆர் கோர்ட் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் கிராம அலுவலர்களின் உறுதிப்படுத்தல்களுடன் எரிபொருள் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.