ஆர்ப்பாட்டக்காரர் டேனிஷ் அலி விமானத்தில் வைத்து ஏன் கைதானார்? (Videos)
அரகலய போராட்ட களத்தில் தீவிர உறுப்பினரான தானிஸ் அலி சிறப்பு போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.
அவர் இலங்கையை விட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் வழியாக , ஶ்ரீலங்கன் விமானத்தில் டுபாயை நோக்கி செல்ல தயாராகஇருந்த போதே , கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி, இலங்கை தொலைக்காட்சி (ரூபவாகினி) கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்தது மற்றும் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது , செயற்பாட்டாளர்கள் குழுவுடன் பலாத்காரமாக கட்டிடமொன்றுக்குள் பிரவேசித்தமை ஆகியவை தொடர்பாகவே தானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டேனிஷ் அலியின் கைது தொடர்பான விமானத் தடை அல்லது பிடி ஆணை உத்தரவைக் காட்ட அதிகாரிகளால் முடியாது போன போது , பயணிகளால் அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதன்பின் கைது செய்வதற்கான பிடி ஆணை பிரதியொன்றை அங்குளோர் முன் சமர்பித்த பின்னரே அவரை விமானத்திலிருந்து கொண்டு செல்ல முடிந்துள்ளது. அதுவரை பயணிகள் தடையாக இருந்தனர் என தெரியவருகிறது.
அவர் வழக்கில் ஆஜராகாததன் அடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்யும் போது விமானத்தினுள் இருந்தோரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் கிழே:
இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினிக்குள் நுழைந்து , இதுவரை அரசியல்வாதிகளது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மக்களின் சொத்தான ரூபவாகினி தொலைக்காட்சி , இனிவரும் காலங்களில் அரகலய போராட்டத்துக்கு முக்கயத்துவம் கொடுத்து , வழமை போல ஏனைய நிகழ்ச்சிகளை நடத்திச் செல்லலாம் என உரையாற்றி காட்சி. இதுவே இவருக்கு எதிரான மிக முக்கிய குற்றச்சாட்டாக கருதப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதி குருந்துவத்தை பொலிஸார் தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை அச்சுறுத்தி நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
தனிஸ் அலி மற்றும் ஊடகவியலாளர் கெலும் அமரசிங்க ஆகியோர் நேற்று (25) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் ஆஜராகிய நிலையில், பொலிஸார் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்த போதிலும் இவர்களுக்கெதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தேசிய தொலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அச்சுறுத்தி நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் என்று கூறப்படும் நபர் இன்று கைது செய்யப்படும்போது , தலைமுடி மற்றும் தாடியை வித்தியாசமாக வெட்டிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் துபாய்க்கு செல்ல விமானத்தில் ஏறிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மல்வத்த இலுகேவெல வேயுட (රොෂාන් ඩනිෂ් අලි නමින් මැල්වත්ත ඉලුකේවෙල වෑඋඩ ) என்ற முகவரியில் இருந்து ரொஷான் டேனிஷ் அலி என்ற பெயரில் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக கடமையாற்றிய இவர், தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள தனது மனைவி வீட்டில் கடைசியாக வசித்து வந்தார்.
மேலும், அவரது தந்தை தமிழர் என்றும், 1980ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய அவர் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பின்னர் ஐக்கிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் தொடர்பில் செயற்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் நீலப் படையில் செயற்பட்டவர் என்றும், நாமல் ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்து , நாமலுடன் செல்பி எடுத்திருந்தமையினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்களால் , ஆர்ப்பாட்டக்காரர்கள் இவர் மீது சந்தேகம் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 13-ம் தேதி தொலைக்காட்சி சம்பவத்துக்கு பின்னர், சோசல் மீடியாக்களில் பலர் அவரைத் தேடிய போது , அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையிலும் மற்றும் பிற காரணங்களுக்காகவும் போராட்ட களத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர் கடந்த 19ம் தேதி போராட்ட களத்துக்கு சென்றபோது , அங்குள்ளோரால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொலைக்காட்சிக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுவதன் அச்சம் காரணமாக அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் விமான நிலையத்தை வந்தடையும் போது, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து பயணத்தடை எதுவுமில்லை. அதன்படி விமான நிலைய அனுமதிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு விமானத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தார்.
ஆனால் 07/26 மாலை 05.45 மணியளவில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பறக்கக் கூடாது என்ற கட்டளையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த இவரைக் கைது செய்தனர்.
தற்போது குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலைய தேசிய இரகசிய தகவல் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்து , கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்னும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் செல்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.
இச்சம்பவத்தினால் இலங்கை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரவு 07.05 மணியளவில் தாமதமாக டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.