நிலை மறந்தவன் – திரை விமர்சனம்
தயாரிப்பு – தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்
இயக்கம் – அன்வர் ரஷீத்
இசை – ஜேக்சன் விஜயன், வினாயகன், சுஷின் ஷியாம்
நடிப்பு – பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன்
வெளியான தேதி – 15 ஜுலை 2022
நேரம் – 2 மணி நேரம் 50 நிமிடம்
இந்திய சினிமாவில் இப்படி ஒரு சமூக அக்கறையுள்ள படமா என ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வியக்க வைக்கும் ஒரு படம் தான் இந்த ‘நிலை மறந்தவன்’.
மலையாளத்தில் ‘டிரான்ஸ்’ என வெளிவந்த படத்தின் தமிழ் டப்பிங் தான் இந்தப் படம். இயக்குனர் அன்வர் ரஷீத் மிகப் பெரிய சமுதாய கண்ணோட்டத்துடன், அக்கறையுடன், ஏமாந்து கொண்டு திரியும் மக்களுக்காக ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரியில் தனது மன நோய் பாதிக்கப்பட்ட தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அதையெல்லாம் மறக்க மும்பை செல்கிறார் பகத் பாசில். அங்கு வேலை தேடும் முயற்சியில் இறங்குகிறார். கிறிஸ்துவ மதத்தில் போலி பாதிரியார்களை உருவாக்கி, தான் சார்ந்த அந்த மதத்தின் மக்களிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ் குழுவிடம் சிக்கிக் கொள்கிறார் பகத். இந்து மதத்தைச் சேர்ந்தவரான பகத்தை, கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாற்றி, மதப் பிரசங்கம் செய்து, அந்த மக்களிடம் பணம் பறிக்கும் வேலையைக் கொடுக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே புகழ் பெறும் பகத், சுகபோக வாழ்க்கை வாழ்கிறார். அவரை வைத்து பிழைப்பு நடத்தும் கவுதம், செம்பன் பல கோடிகளை அள்ளுகிறார்கள். ஒரு கட்டத்தில் தான் செய்வது பாவம் என உணர்கிறார் பகத். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இப்படியெல்லாம் கூட ஒரு கதையை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதை அமைத்து, மதத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி படமெடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்பாவி மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். அதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய ‘சபாஷ்’ போடலாம். அற்புதக் கூட்டம் என அளவில்லாத பொய்களை அவிழ்த்து விடும் கூட்டத்தின் தோலை உரித்திருக்கிறார் இயக்குனர். ஒரு நெகிழ வைக்கும் சென்டிமென்டை வைத்து போலி மதக் கும்பலுக்கு முடிவு கட்டுவது தியேட்டர்களில் கைத்தட்டலை வரவழைக்கிறது.
கன்னியாகுமரியில் ‘மோட்டிவேஷனல் ஸ்பீச்’ வகுப்புகள், அதாவது ‘ஊக்கமளிக்கும் பேச்சு’ பயிற்சிகளை வழங்குபவர் பகத் பாசில். அங்கிருந்து அவரை அப்படியே ‘அற்புதக் கூட்டம்’ நடத்தும் போலி பாதிரியாராக அற்புதமாக உருமாற்றியிருக்கிறார் இயக்குனர். பகத் பாசிலைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு நடித்திருக்க மாட்டார்கள் என காட்சிக்குக் காட்சி மிரட்டுகிறார் பகத். அதிலும் ஆவேசமாகப் பேசி, நோய்வாய்ப்பட்டவர்களை குணமடைய வைப்பதாக ஆட்களை வைத்து ஏற்பாடு செய்யும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. இப்படியெல்லாமா கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம் என சாதாரண மக்களுக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார்கள். பகத்தும் அவரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் திருந்தவே மாட்டார்களா என யோசிக்கும் போது சரியான முடிவு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனது மதத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கார்ப்பரேட் களவாணிகளாக கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ். தீவிர மதப் பற்றாளர்களின் அப்பாவித்தனம் இப்படிப்பட்டவர்களுக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கொள்ளை கூட்டத்திற்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவியை வைத்தே முடிவு கட்டுவது எதிர்பாராத ஒன்று.
படத்தின் பாதிக்குப் பிறகுதான் நஸ்ரியா வருகிறார். காதலால் வாழ்க்கையில் ஏமாந்து போன ஒரு கதாபாத்திரம். குடிப் பழக்கமும், போதைப் பொருள் பழக்கமும் உள்ள ஒரு பெண். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவைப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
தமிழில் இதுவரை இப்படி ஒரு முழு படம், ஏன் ஒரே ஒரு காட்சி கூட வந்ததில்லை. இந்து மத சாமியார்களை பல படங்களில் கிண்டலடித்த சில தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு, கிறிஸ்துவ மதத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் இப்படிப்பட்ட போலி மத போதகர்களைப் பற்றி ஒரு காட்சி கூட எடுக்க தைரியம் இல்லையே என இப்படம் பார்க்கும் போது யோசிக்க வைக்கிறது.
இக்கதையை வேண்டுமென்றே எழுதியிருப்பார்கள் என ஒரு கூட்டம் பேசும். ஆனால், இக்கதையை எழுதியவரே வின்சென்ட் வடக்கன் என்ற ஒரு கிறிஸ்துவர்தான். மலையாளத்தில் வந்த படம் என்றாலும், தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியவில்லை. அந்த அளவிற்குப் பொருத்தமாக டப்பிங் செய்திருக்கிறார்கள். தமிழுக்கான வசனங்களும் பவர் புல்லாகவே அமைந்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
நிலை மறந்தவன் – உண்மையை உரக்கச் சொல்பவன்