யாழ். பல்கலை பகிடிவதை: குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருடங்களுக்குக் குறையாத வகுப்புத் தடை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்துக்குக் குறையாத வகுப்புத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்கள் ஒன்றுகூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கலைப்பீட புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புதுமுக மாணவர்களின் வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பூர்வாங்க விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்துக்குக் குறையாத வகுப்புத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.