சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட எங்களுக்குத் தெரியும்- மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவையில் நாட்டின் விலைவாசி உயர்வு பற்றிய எந்த ஒரு எதிர்க்கட்சியின் கேள்விகளையும் பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து வருவதாகச் சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பேக்கேஜ்டு உணவுப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ஏன் உயர்த்தினார்கள் என்ற கேள்வி எழுப்பினார்.
ஆகவே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் விவாதம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சி எந்த ஒரு பதிலையும் அளிக்கத் தயாராக இல்லை என்று சாடுகிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி இது தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, “ஏன் சமையல் எரிவாய் சிலிண்டர் விலை ரூ.1053?, தயிர், தானியங்கள் மீது ஏன் ஜிஎஸ்டி? ஏன் கடுகு எண்ணை ரூ.200க்கு விற்கிறது? ஆனால் நம் அரசர் 57 எம்.பி.க்களை கைது செய்துள்ளார். 23 எம்.பி.க்களை நீக்கம் செய்துள்ளார். ஏன்? கேள்வி கேட்ட ஒரு குற்றத்துக்காக.
பணவீக்கம், வேலையின்மை பற்றி கேள்வி கேட்கக் கூடாதா? ஜனநாயகக் கோயிலில் (மக்களவை) கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தவிர்க்கிறார் நம் அரசர். ஆனால் எங்களுக்கும் தெரியும் சர்வாதிகாரிகளை எப்படி எதிர்ப்பது என்பது” என்றார் ராகுல் காந்தி.
செவ்வாயன்று பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் 19 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். திங்களன்று லோக்சபாவில் 4 காங்கிரச் உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். இவர்கள் இனி கூட்டத்தொடருக்கே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் ராகுல் காந்தி குறிப்பிட்டு பிரதமர் மோடியை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாக ‘அரசர்’ என்று குறிப்பிட்டு சாடியுள்ளார்.