ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள்.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர். இஸ்லாமிய மதப் பெரியார் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கான போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்க்கின்றனர்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் தலைநகரின் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்திருந்த நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.
பாதுகாப்புப் படையினர் மட்டுமே கட்டிடத்திற்குள் இருந்தனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை வீசியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படைகள் முதலில் ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்திய போதிலும், பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர் என்று அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதிமி போராட்டக்காரர்களை கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டின் வெவ்வேறு அரசியல் பிரிவுகளுக்கு இடையிலான மோதல்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதைத் தடுக்கின்றன. இதனால் போராட்டம் வெடித்துள்ளது.
எவ்வாறாயினும், அல்-சதரி சக போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், புதிய ஆளும் கூட்டணியை உருவாக்குவது சாத்தியமற்றதாகும். அவரும் அவரது ஆதரவாளர்களும் முஹம்மது அல்-சுடானியின் பிரதம மந்திரி வேட்புமனுவை எதிர்த்தனர்.
ஏனெனில் அவர் ஈரானுடன் மிகவும் நெருக்கமானவர் என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் வளம் மிக்க அந்தஸ்தில் இருந்த போதிலும் அது எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளை தற்போதைய சம்பவங்கள் நினைவூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல், தொழில் இன்மை மற்றும் பொது சேவைகளின் நிலை ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்திற்கு மத்தியில் 2019 இல் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.