கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
நாட்டினை வங்குரோத்து நடவடிக்கைக்கு கொண்டு சென்றோருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையில் இருந்து , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிப்பதென உச்ச நீதிமன்றம் நேற்று (27) முடிவு செய்துள்ளது.
அத்துடன், இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிக்குமாறு கோரி பிரதிவாதி கோட்டாபய ராஜபக்சவின் கடைசி வாசஸ்தலத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்டிபி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் அரசியலமைப்பின் 35 ஆவது சரத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு உரிமையுள்ளவர் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் இருந்து அவரை நீக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நீதிமன்றம் இத் தீர்ப்பை அளித்தது.