பிரதமர் மோடியை சந்தித்து பேச ஓபிஎஸ் – ஈபிஎஸ் திட்டம்..
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு இடையே சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். பிரதமருடனான சந்திப்பை அதிமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை கோஷம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தொண்டர்களுக்கு இடையே கலவரமாக மாறி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை சீல் வைக்கப்பட்டது. பின்னர் சீல் அகற்றப்பட்டுஅலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலால் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மறுபுறம் குடியரசு தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோதும், திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றபோதும், இருவரையும் சந்தித்து பேச பிரதமர் மோடி மறுத்துவிட்டதாக தகவல் வந்தன.
இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டியை தொடங்கி வைக்க வியாக்கிழமை சென்னை வரும் பிரதமர் மோடி, இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.